Sunday, July 26, 2009

ரத்தத்தில்


ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு

சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு

திருடிப்பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு

கூட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு

காட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு

பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ

முதலில் என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்

இல்லெங்கில்
எச்சில் பிழைப்புதான்
இரண்டும்கெட்டான் வாழ்க்கைதான்